Monday, 16 April 2012

பண..மனிதர்கள்..


குருதி கறையுடன்...
குற்ற உணர்ச்சி இல்லாமல் ... வலம் வருகிறது பணம்!!!
பணத்தாசை மனிதர்கள்..
குருதி வடியும் கோர பற்களுடனே.. வலம் வருகிறார்கள்
பசப்பு வார்த்தைகளும் கள்ள சிரிப்புமாய்..
துரோகங்கள் பணம் கட்டும் கயிறுகளாய்.. மாறி போன பின்
துரோணாச்சிரியர் வேடமிடும் கயவ கூட்டம்
உழுது அறுத்த பின் பதறாமல்.....
பதர்தனை கூலியாய் தரும் குள்ள நரிகள்
தாமதப்படுத்திய நீதியும்.. கூலியும் ஒன்றுதான் என்பதை
உணரமறுக்கும் உத்தமர்கள் வருகிறார்கள்..
இரத்தம் தோய்ந்த புன்னகையுடன்.. கரம் குலுக்க
காத்திருக்கிறேன் கரம் குலுக்க வெட்கத்துடனும் வேதனையுடனும்!!

Sunday, 15 April 2012

நிழலும் உனக்காக..


எந்தன் நிழலை தேடி கொண்டிருந்தேன்..
காலை வேளையில் சந்தித்து ..
கண்கள் கதை பேசி கைவிரல் பிரிந்த பேருந்து நிறுத்த ஓரம்
உன் கூந்தலில் தவறிட்ட நானும் மறந்துவிட்ட
ஒற்றை ரோஜாவை ....
வாடாமல் காத்தபடி காத்திருந்தது என் நிழல் !!!

அண்ணல் அம்பேத்கார்-14.04


செருப்பணியாத கால்கள் உண்டு இன்றும்..
செருப்பு கூடாது எனும் செருக்கில்லை இன்று!
சட்டை அணியா மனிதன் உண்டு இன்றும்...
சட்டை கூடாது எனும் சட்டாம்பிள்ளைகள் இல்லை இன்று!
பெண் வன் புணர்ந்தவனும்..
அதை சரியென்று சொன்னவனும்..
சாதீய சதி வளர்த்தவனும்.. வீழ்ந்துவிட்டான் இன்று
அதை வீழ்த்திய ஆயுதத்தில் கூரியது..அம்பேத்காராம்..!
சட்டத்தை மதிக்கும் அனைவருக்கும் நல் தலைவனவன்..
தலித்திற்கு மட்டுமன்று! வாழ்க வளமுடன்!

ஒரு மழை..


கூட்டப்படாத சாலைகளையும்
கவனிக்கப்படாத கட்டிடங்களையும்
கட்டிபிடித்து கழுவிட்டது
கருணை மிகு கார்மேக மழை!!

ஓட்டம்....


ஒரு கூட்டம்
ஓடி கொண்டே இருக்கிறது..
பள்ளமாகிபோன அரைசான் வயிற்றை நிரப்ப!
மறு கூட்டமும்
ஓடி கொண்டே இருக்கிறது..
அதிகம் நிரம்பி வீங்கிவிட்ட அரைசான் மேடை சமப்படுத்த!???

Thursday, 12 April 2012

சிலந்தி..பூ


சிறு இதழ் பிரித்து சிரித்துவிட்டாய்
சிலந்தி வலையில் சிக்கிய சிறு பூச்சியாய் மனது
சிக்கலை விடுத்து வர சிறிதளவும் முயலவில்லை
சின்னஈர இதழ் விரித்து சிறிதுசிறிதாய் தின்று விழுங்கும்
சிற்றின்பத்திற்காய் தவமிருக்கிறேன்!!!!??

Tuesday, 10 April 2012

ஓய்வு...???


இனிய இரவும் அதன் நிலவும்..
நினைவுகளை கிளறிவிட்டு நித்திரையை கொன்றுவிட்டு
ஓய்வெடுக்க ஓளிந்து கொண்டது.. பகலவனின் முதுகில்
பகலவனின் சூடும்..பணியின் சுமையும்..
பகலையும் ஓய்வற்றதாக்குகிறது...????
உன் நினைவிகளிருக்கும் வரை ஓய்வின்றியே கழியும் என் நாட்கள்!

பருவம்


சொல்லாத சித்திர கதைகள்...
கேக்கப் படாத தாலாட்டு..
பயமுறுத்தாத கும்மிருட்டு..
பகிரப்படாத பொய் சொன்னால் கண்குத்தும் சாமி கதைகள்...
அர்த்தமற்றதாகி கொண்டிருக்கிறது.. "குழந்தை பருவம்"

நிஜ நிழல்


நிஜத்தை ஒதுக்கிவிட்டு ..
நிழலை , நினைவை நேசித்து கொண்டிருக்கிறேன்..
எனை ஒதுக்கிவைத்து துன்புறுத்துவதேயில்லை..
உன் நினைவுகளும்..நிழலும்!!

Thursday, 5 April 2012

மறதி....


மறுத்தாயா.. மறந்தாயா..
இனி
மறுப்பாயோ ..இல மறப்பாயோ..
நான் மறவேன்
மரணிக்கும் வரை..
நீ காதல் மறுத்த தினத்தையும்
காதல் மரணித்த தினத்தையும்...

தேதி..


ஏதெனும் பாரங்களை ஏற்றி கொண்டே..
நகர்ந்து விடுகிறது இந்த நாட்கள்..
தேதி கிழிக்காமலே ஏன் நகர்கின்றன நாட்கள்..
பத்து தின நாட்களை மொத்தமாய் கிழிக்கையில்..
இந்த வேலையையாவது தினம் ஒழுங்காய் செய்து கிழித்திருக்கலாமோ????