Thursday, 30 December 2010

புத்தாண்டு..

புத்தாண்டு..

புது வரவு..??

சூரியன் புதிதில்லை..

புவியிலும் மாறுதல் இல்லை..

ஆனாலும்...

புது ஆண்டு..

புதிய நாள்..

என் பழையன போகட்டும்..

புதியன பொங்கட்டும்..

நல்லவை ...

மறு பிறப்பெடுக்கட்டும்..

புதியதோர் உலகம் செய்வோம்..

புது வருடமே

புத்தொளி தா..

புதிய கனவுகள்..

அணு குண்டு..

அமெரிக்காவும் அழிக்கும்..!!

ஆயுதங்கள்...

கண் காட்சி கூடத்தில்..

அல்குவைதா..

மக்கள் சேவை மன்றமாய்..!

காஷ்மீர்..

ரோஜாக்கள்..எங்கள் பெண்களின் கூந்தலுக்கு

இலங்கை..

தலை நகரிலிருந்து..யாழிலங்கை வரை

தடையற்ற பயணம்..தமிழனுக்கு!

அரசியல்..

மக்களின் அடிமை சேவகமாய்..!

அரசியல்வாதிகள்..

லஞ்சம் நீக்கப்பட்ட அரிச்சுவடி பயின்று..

போதும்..வெறும் கனவல்ல என் நாட்கள்!!

//ஈழம் மலர்ந்தே தீரும் // சிந்தனை

//ஈழம் மலர்ந்தே தீரும் // சிந்தனை

மனித எண்ணங்கள் (சிந்தனை)ஒரே புள்ளியில் குவிந்தால் அது நடந்தே தீரும் என்கிறார்கள் வல்லுனர்கள்!! தமிழர் நாம் அனைவரும்

புது ஆண்டு தொடக்கம் முதல்..''காலையில் விழித்தெழும் போதும்''

''இரவு உறங்கும் முன்னும்''..//ஈழம் மலர்ந்தே தீரும்// என எண்ணுவோம் .வெறும் 10 + 10 20 வினாடிகளை செலவிடுவோம், நமது எண்ண ஓட்டதில்..சில கோடி தமிழர்களின் எண்ண அலைவரிசை அமைத்து பார்ப்போம்! நட்புகளே வாருங்கள்,நம் இன கருவழித்த கயவர்களின்.. கனவழிப்போம்! எழுந்து நிற்போம்!

மற்றவரை அழித்தல் நம் நோக்கமல்ல..''வாழ்தல்'' அது போதும்!!

செலவிடுவோம்..சில மணித்துளிகளை! உங்கள் ஆதரவு வேண்டும்

இது நடக்குமா? அறிவீனமோ? நான் அறியேன்..

ஆனால்..இஸ்ரேல் உருவாக ஒட்டு மொத்த அவர்களின் ஆசையும் ஒரு காரணம் என் நம்புகிறேன்.

சில நிமிடங்கள்தானே என்னால் செலவழிக்க முடியும். இந்தியாவில் பிறந்து.. உணர்வு குறைந்த தமிழனாய் வாழும் குற்ற உணர்ச்சி குறையவாவது..இதை செய்ய விழைகிறேன்.

''எண்ணம் ஏற்றம் தரும்'' என்பது உண்மையானால்..உணர்வுபூர்வமாய் எண்ணுவோம்..

//ஈழம் மலர்ந்தே தீரும் என//

உங்களின் சில மணிதுளிகளை யாசிக்கும்

செந்தில் முருகன்.

Wednesday, 29 December 2010

ஒரு நாளில் உதிரும் பூக்கள்..

இயற்கையாகவோ..மனிதம் மரத்த மனிதர்களின் கள்ளி பாலுக்கும் இரையாகும்

உயிர் பூக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

வாழ்ந்த நிமிடங்களை

வருடங்களாய் கணக்கிட்டு

காலன் கை கொண்டானோ!

பாழும் மனிதர்களுக்கிடையே

பந்தாடப்படுவாய் என்றெண்ணி

பாசம் கொண்டு பாசக்கயிறு வீசினானோ!

பத்து மாதம் கண்ட கனவுகளுக்கு

பரிசாய்...

ஒரு நாள் மட்டும் உயிர் கொடுத்தானோ!

மலர்ந்த உடன்..

காலன் பறிக்கும்.. மலரே

நீ இறைவன் காலடியிலே இரு!!

2000ம் வருடத்தில் என் உடன் பணிபுரிந்தவர் தன் குழந்தையை இழந்து..இக் கவிதைக்கு காரணமானார்!!


Tuesday, 28 December 2010

வாழை மரப்பூக்கள்

வருடங்கள்..

பல கடந்து சொந்த கிராமம் செல்வது

சுகமாய்தான் இருந்தது!

20 கி.மீ தாண்டாத

மேடு பள்ளம் பயணம் கூட

இனிக்க தொடங்கியிருந்தது..!!??

முன் இருக்கை அழகு மயிலை கண்ட பின்னே..

மாமா பெண் கல்யாணம்

வந்ததுதான்டா ஆகனும்

"அம்மா கட்டளை"..!!

விருப்பமேயில்லாது

கிளம்பினேன்..

கிராமத்தை அடையும்..கடைசி கட்ட 'குலுக்கு பயணம்'

முடிவதில்..இப்போது விருப்பமேயில்லை!!

கிராமத்துக்கு பொருந்தா உடை..

அனைவரும் எனையே பார்த்தாலும்..

அவள் பார்வைகள்தான்..

எனை பந்தாடியது..பேருந்து ஆட்டம் போலே!

தாய்மொழி சிறப்பை உணர்ந்தேன்..

பிறகென்ன..அக்கறையே இல்லாமல்

படித்த போதும்..அவளை வருணிக்க வடிக்க

வார்த்தைகளை அள்ளி தருகிறதே!!

முப்பது நிமிட பயணத்திற்குள்..

முப்பதேழுமுறை..

முன்னிருக்கையின் கண்

என்னிருக்கை மீது..

கல்யாணம் செய்ய சொல்லும்

அம்மாவிடம் சொன்னால்..

கையோடு பேசி முடித்து ..

அனுப்பி வைப்பால் என்னோடு ..எவ்வளவு ஆசை!!!

பேருந்து நின்றது..இதயமும்..

துடிக்க வைத்தாள் சிறு புன்னகையாலே

சிறு கிராமம்தான்..கிட்டிவிடுவாள்

எனும் நம்பிக்கையால் நிற்காமல் துடித்தது!!

தயங்கினேன் பேச..

அவளும் தயங்கினாள்..பேசுவேன் என எண்ணி

தந்தியடித்த வார்த்தைகளால்..

தள்ளி போனேன்..போனாள்..

கல்லூரியில் தொடங்கி

கல்யாணம் வரை..7ல் ஏமாந்து

8ஐ கைபிடித்த காதல் குருவுக்கு

தொலை பேசினேன்..நட்பின்றி அசையாதே காதல் படகு!!

கர்ண கொடுராமாய்..

சிரித்தான்..முதல் பார்வையிலே காதல்...

நீ என்ன விடலையா..?

கல்லூரி பருவமல்ல..இது கல்யாண வயது..

காசு செலவு செய்து..காதுக்கு இரத்தம் (காதலுக்கும்)!

அவனிடம் சொன்னேன்..

ஒரு முறையே பூக்கும்..வாழை மரம் என் மனம் என

சிற்சில ஆலோசனையுடன் வாழ்த்தினான்!!

மெதுவாய்..

அவளை தேடும் அலை பாயும் கண்களுடன்

சுற்றி சுற்றி வீடையடைந்தேன்....

வாங்க அண்ணா....

என்னை உங்களுக்கு மறந்து போச்சா..

பஸ்லியே பேசுவிங்கன்னு பார்த்தேன்..

எங்க போனிங்க..இவளவு நேரம்

ஒரு வார்த்தை பேசுவாளா..என ஏங்கிய மனது

கேட்க மறுத்தது..தங்கையின் வார்த்தைகளை

உங்களுக்கும் கேட்டிருக்கும்..என் இதய வெடிச்சத்தம்!!!

அம்மா கேட்டாள்..

என்னடா இது கோமாளி போலே உடை என்று!!

உண்மைதானே..

ஆமாம் ...

சில நேரம்..வாழைமரங்கள் இரண்டாவது முறை பூக்கும்தானே!!??


Wednesday, 22 December 2010

கதிரவன் மகள்..ஒருத்தி..

அதிகாலையில்..

தாகம் தனிக்கும் நீர் குடத்துடன்

கதிரவன் மகளாய் ஒருத்தி..!

கதிரவன் வந்த பின்னும்

சந்திரன் உதிக்கும் கண்கள்..

அதனில் என் கண்கள்!!

நான் கண்ணோடு கண் நோக்கிய போதும்..

அவளோ..

இடக்கையால் இடைவெளி பிரேதேசத்தை

மறைக்க முயன்றவளாய்!!??

அவள் கை தொடர்ந்த என் கண்கள்

அபாய வளைவுகளில் பயணித்து

தாகமாய் அவள் கண்களை நோக்கி

மீண்டும்....

இம்முறையோ..

சரியாத மேலாடையை சரி செய்து..

என்னை! கண்ணை!

அபாய பயணம் மேற்கொள்ள செய்தாள்..

மேடுகளையும் வளைவையும்

கடினமாய் கடந்து..

மீண்டும் அவள் கண் நோக்க....!

இம்முறை நேராய் என் கண் சந்தித்தாள்......

அப்பப்பா....!!!

மேடுகள் வளைவுகள் பயணமே..

பரவாயில்லை

Friday, 17 December 2010

கருணை குறைந்த கடவுள்..

மனிதம் மரத்துப்போன

மனிதர்கள்(ல்)

மரங்கள் மறைய..

மரமாய் போன மனிதர்களால்

நிரம்பிப்போன மண்!

இயற்கை அன்னை..

அள்ளி தருவதில்லை -இப்போது

அழிப்பதில் அக்கறையாய்

இல்லாதவனை குறிவைத்து

இடியாய் இறங்கும் இயற்கை சீற்றம்

கழனியில் விதைத்து

கன்னத்தில் கை வைத்து

கருணை உண்டா வருணனிடம் எனும் போது

வறண்டு போகும் வானம்

கடன் உடன் பட்டு

நீர் இறைத்து...

கதிர் அறுக்கும் பொழுது

கடனில் மூழ்க வைக்கும் வெள்ளம்

விவாசாயத்தால்...

வெதும்பி- புலம் பெயர்ந்து

வீடு துறந்து..குடிசையில் அடைந்து

கல்லாய் போன கடவுளால்..

கல் சுமந்து, காங்கிரீட் போட்டு....

மனது போல புண்ணாகி போன

கைகளால்...

குறைந்துவிட்ட கூலியை குமையும்

மனதோடு வாங்கி..

வாங்கிய கடன் அடைக்க

பத்திரமாய் குடிசைக்குள் பதுக்கி வைத்தால்...

அக்கினி பகவான்..எமனாகிப்போனானே.....

மனிதம் மறந்த மனிதன் போல..

கருணை மறந்த கடவுளை..

இன்னமும் வணங்குகிறேனே!!!

குறிப்பு:

2004ம் வருடம்..ஸ்ரீபெரும் புதூரில் பணியாற்றிய காலம், 15 தின கூலியை சனிகிழமை பெற்று திங்கள் காலை தீயிடம் பரி கொடுத்தனர் என் மக்கள்! அதில் ஒரு பெண்மணி கருகிய 100 ரூபாய் நோட்டுகளை வைத்துகொண்டு கதறியழதபோது..கடவுளை சபிப்பதை தவிர வேறு என்ன செய்வது!! இன்னமும் இவ்வலம் எங்காவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது..."கடவுள் இருக்கிறாரா??"

Thursday, 16 December 2010

சினிமாவும்.. சிறுநாயகிகளும்

சாதி பேதமில்லை

மதவெறி இல்லை

ஆனாலும் ஒரு மார்க்கம்!

கற்பனையும்..

கனவுகளும்..

நம்பிக்கையும்..மூலதனம்

அப்துல்கலாமின்

வாக்கு .. பொய்க்கும் இடம்!

ஆயிரமோர் ஆயிரம்

கனவுகள் நிதம் நிதம்..!

பலிதமோ..வெகு சில

வீட்டு நிழற்கண்ணாடி..

அழகென்று உரைத்தால்..

இனுமொரு ஜோடிக்கால்கள்

தேயும்..வாய்ப்பிற்காக!

கதா நாயகி..

கவனிக்கப்பட வேண்டி..

தார் பூசி நிற்கும் துணை நடிகைகள்..

வாழ்க்கையிலும் நிஜ நடிகைகள்..!

கவர்ச்சி உடை..நாயகி

ப்ரேக் டைம் கேரவனில்..

இவர்களோ..

அதே துண்டு உடையுடன் நாள் முழுதும்..

உடல் மறைக்க முடியாது..

ஆனால்

பசி மறைத்து..

உணர்ச்சி மரத்து..

வேடிக்கையல்ல

இவர்கள் வாழ்க்கை...!

கற்பாடை கழற்றிவிட்டு..

அட்ஜஸ்மென்ட் ஆடையணிந்து..

வாய்ப்பு கதவை தட்டும்..

அவலம் கதா நாயகிக்கு மட்டுமல்ல

சில நேரம் இவர்களுக்கும்!!

ரஜினி...

மூன்றெழுத்து..

ரஜினி..

லாபம்..

ஸ்டைல்..

உயிர்..

பிறப்பு..

வளர்ப்பு..

அயல் மண்...

உயர்வு..

வாழ்வு..

தமிழ் மண்!

கருவில் பத்துமாதம்..

பொறுத்திருந்தாயா (அ) குறை பிரசவமா....

வேகம்!!!

கட்டித்தங்கம்..

கருப்புதான்..

பட்டை தீட்டியதோ பாலசந்தர்

நிறம்..

அழகு..

குறைவு!

உழைப்பு ..

முயற்சி

அதிகம்!

அடக்கம்....அதிகம்

ஸ்டைல்..

பணிவு..

வேகம்..

நட்பு..

மனிதம்...நிறைவு!

வெற்றியின் இரகசியம்..

உழைப்பு!

நடிகனாய் பிடிக்காதிருக்கட்டும்..!!!

மனிதனாய்

மறுக்க இயலாது..

உழைப்பாளியாய்

உண்மை...

நம்பிக்கையில்

நிஜ நாயகன்..

முயற்சி

இன்றைய வளர்ச்சி...

கோடிகள்..

இவனது விரலசைவில்!

ஆனாலும் அடக்கம்!

மேக்கப்..நடிக்கும் போது மட்டும்..

சிகரெட்- விட்டு விடு!

தலை முடி - கொட்டி விட்டது!

பன்ச் டயாலக்குகள்- பாவம்

எடுத்துக்கொள்வோம்...

உழைப்பு-முயற்சி-நம்பிக்கை-பணிவு!

யாரிவன்..

கிரிடம் தேடி வரும் போதும்..

இமயமலை ஓட்டம்...

விவேகமா....பயமா??

அறியவில்லை..

அவனை தவிர!

கல்லெறிந்தவர்கள்...

கைகுலுக்கும் போதும்..

கரம் பற்றி வந்தவர்கள்..

கல்லெறியும் போதும்...

அமைதி..

நிதானம்!!

அனைத்தும்...

அவன் செயல்.... எனும்

"நான்' மறந்த

அவனை இரசியுங்கள்!

தீராக்காதல்

உனை பிரிந்து ... வருகையில்
நாம் அறியாமலே ..
என்னுடன் வரும் உன் கூந்தல் துளியும்
உன் ஸ்டிக்கர் பொட்டும்..தரும் சிலிர்ப்பு
சொல்லாமல் சொல்லுதடி.. என் காதல் இனும் தீரவில்லை என!!!

Wednesday, 15 December 2010

சூறை காற்று..

பூமிப் பெண்ணை..

மழைதுளியால் முத்தமிட

ஆவேசமாய் காத்திருக்கும் கருமை வானம்!



வானவனின்

ஆவேசத்தை தணிக்க..

வருடிவிடும் விதமாய் காற்று!



நனைந்தேன்...

நடந்தேன்..

நாசியில் மண் வாசம்!



பலமாக காற்று..

பரிதவித்து போனேன்..

பளீர் மின்னலாய் அவள்!



கையில் குடையுடன்..

காட்டன் புடவையில்..

தேவதை..என் கனவு தேவதை!!



அலை பாய்ந்தது கண்கள்..

ஆவேசமாய் காற்று..

அவஸ்தையில் அவள்..



அட்டூழியம் செய்தது-காற்று

அடங்காத குடை

மறைக்க முடியாமல் மேலாடை!!



அடங்காத மேலாடையால்

அவஸ்தையில் அவள்

அடக்க நினைத்தும் முடியாமல் நான்-கண்களை!



பளீர் மின்னல்கள்

பலரின் கண்கள்

பாய்ந்து சென்று அடக்கினேன்-குடையை!



நீர் வழிய

கண் நீர் வழிய -அவள்

காதலாய் உருகி நான்!



ஏங்குகிறேன் மீண்டும் ஒரு சூறை காற்றுக்கு!!

Sunday, 21 November 2010

உதட்டின் வழி...

எங்கு

கற்றாய் பெண்ணே..?

உதடுகள்....

வழி உயிர் உறிஞ்ச!!!

உன் இதயம்..

லப் சொல்ல..

என் இதயம்..

டப் சொல்ல..

இரு இதயமும்..

ஒன்றானது..நாம் ஒருங்கிணைந்த பொழுது!

எனது உள்ளத்தில்

உருவான காதலை

உதடுகள் வழி சொல்வேன்...

உனது உதடுகளை சந்தித்து..!!

உன் அதரத்தை

சுவைத்து..சுவைத்து..

என் உதிரத்தில்

இனிப்பு!!!

என்னை

சுகர் பேஷண்டாக்கு!!!

உன் அதரத்தால்..

என் உதிரத்தை இனிப்பாக்கு!!!


Thursday, 18 November 2010

குழந்தைக்கு ஒரு கடிதம்

இது என் மகன் பிறக்கும் முன் எழுதிய கவிதை கடிதம்!!

எனது இதயத்தை
நிறுத்தி வைத்திருக்கிறேன்...!
உன் பிஞ்சு கால்கள்
உதைத்து இயங்க வைக்கத்தான்!

என் அழுக்குகளை அகற்றி
வைத்திருப்பேன்....
என் மார்போடு உனை அணைப்பதற்காய்!

சோப்புகள் இலாத குளியல்தான்...
உனது பன்னீர் அபிஷேகம்
பெறுவதற்காய்...!

அம்மாவிற்கு மஞ்சளும்..
எனக்கு சந்தனமும்..
வாங்க போவதில்லை..
நீ தருவதற்காய் காத்திருக்கும்
அப்பா!

Saturday, 13 November 2010

NRI அப்பாக்கள்

நட்புகளே..என் மகனுக்காய் நான் எழுதியது..இன்றும் பலருக்கு பொருந்தும்..

என்ன செய்வேன் நான்..??

சபல எண்ணங்கள்---சட்டைக்குள்

பாச உறவுகள்-- பணத்தினுள்

மனம் நாடும் மனைவி-கனவுகளில்

உற்சாக நட்புகள்-- எதிர்கால சிந்தனையில் என

அனைத்தையும் புதைத்து வைத்தேன்....

உன் அழு குரல் செவியுனுள் விழும் வரை!!

நீ உதைக்காத மார்பு..

நனைக்காத சட்டை..

உனை முத்தமிடா எனுதடுகள்..

உன் சிரிப்பை காணா விழிகள்..

என் கனவுகளுக்காய்..

உனக்கு துரோகம் இழைத்தேன்!

உன் நினைவுகள்..

என் கண்ணீராலும் அழிவதில்லை...

நீ பசித்தால் அழுவாய்..

நான் பார்ப்பதற்காய் அழுகிறேன்..

காய்ந்து விடுவது..கண்ணீர் கோடுள்..

அதை காய விடுவதில்லை உன் நினைவுகள்..

கண்ணீர் வற்றும் வரை தொடரும்..

ஆணந்த கண்ணீர்..

ஆரம்பமாகும் உன் அருகில் நான் வரும் போது..

அந்த நாள்.....???

காத்திருக்கும் உன் அப்பா!

(உனை பொருத்தவரை அன்பிலா)


Saturday, 6 November 2010

வலியில்லாத எழுத்துகள்

வறுமை இலாத
வாழ்க்கையால்..
வறண்டு போய் இருக்கும்
என் எழுத்துகள்!!

வறுமையின் வலி
தெரியா என் எழுத்துகள்
வாசமற்ற காகிதபூக்களாய்!!

மனவலியின்
வெளிபாடுகளை எழுத்தாக்கி
வலுவில்லாத எழுத்தாளனாய்
வலம் வருகிறேன்

வழியில்லா காட்டில்
ஒற்றை காலடித்தடத்தை தவறவிட்டு
கால் வலியுடன்
கண்களால் தேடுகிறேன் ஒற்றைத்தடத்தை

வலியிழந்து..
களைப்புடன் கண்ணுற்ற போது..
என் காலடித்தடங்களால்...
பல ஒற்றையடி தடங்கள் வழிகளாய்..

ஒற்றை காலடித் தடத்தை
தேடி- ஒரு நூறு தடம் உருவான
புதிர் வெளிபடும் முன்
ஒற்றையடி வழிகொண்ட காடு மீண்டும்!!!

தெளிவாய்
தடம் தெரிந்தும்..
புதிய தடம் பிறப்பிக்கின்றன
என் காலடித் தடங்கள்

திரும்பிப் பார்க்கிறேன்..
தெளிவில்லாத ஒற்றை காலடி தடம்
என் வலியில்லாத..
எழுத்துகள் போலவே!!

Sunday, 31 October 2010

நான் வண்டு மழை காற்று-அவள்

வண்டினத்திற்கே..

என் மீது கோபம்..

உன் தேனுதட்டு தேனை ஒருமுறை பருகியதால்!

மழை துளிமீது எனக்குண்டு கோபம்..!

பிறகென்ன...

பிறை நெற்றியில் விழுந்து..

கூர் நாசி கடந்து..

திகட்டாதேனுறும் உதட்டை வருடி..

நான் ஸ்பரிசிக்கா தரிசிக்கா..வழிகடந்து..

நாபிகமலத்தில் தேங்கினின்று பரிகசிக்கிறதே!

கார் குழலில் அலைபாய்ந்து..

இனியவளின்..இடைவெளிகாட்டி

கால் நகம் வரை சுதந்திர உலா வரும் ..

காற்றே..

உனக்கும் உண்டு சவால்!!

கனியவள்...அனுமதித்து அணைக்கின்ற வேளையில்..

எங்கள் இடை புகுந்து..

வெளியேறி பார்??!!


Monday, 25 October 2010

காதல் பித்தன்.

கண்மணிகள்..தேவையில்லை

எனக்கு..

அவளை காணாத நேரத்தில்!

கனவில் வரவேண்டாமடி நீ....!?

அதன் பின்..

தூங்குவதையே தொழிலாக்கி விடுவேன்!

சிந்திக்க தெரியாத சிறுவனாய்தான்..இருந்தேன்

அவளை காணும் வரை!

கவிதைகள் எழுதும் பித்தனானேன்..

காதலை அவள் ஏற்காததால்!


Sunday, 24 October 2010

காதல்..ரத்து

சிற் சில ஊடல்களுக்கு பின்...

அழைத்தாய்..

வர சொன்னாய்..

வந்து நின்றேன்..

தொலைபேசினேன்..

கால் மணி காத்திரு என்றாய்..

கால் நாள் கழிந்தது..

கால் வலிக்க ..கைபேசினேன்..

சூல் நிலை அமைய வில்லை என்றாய்..

சூரியன் காணாதகாந்தியாய்..

சுருங்கி போனேன்..மன வலியில்!

தொடர்ந்த சில தினங்கள்...

தொலைபேசவில்லை..

வளர்த்திருந்தேன்..

வைராக்கியம்..தாடியுடன்..

அலைபேசியில்..அழைத்தாய்..

குரலில் தேன் கலந்திருந்தாய்..எப்பொழுதும் போலவே..

வண்டு..வந்தே சேரும்..

என அறிந்தே இருப்பாய்...!

சிலமணிதுளியில் வா என

ஒழுங்கற்ற தோற்றத்துடனே..

ஓடி வந்தேன்..ஓசை எழுப்பிய ஆசையில்..

கையில் புகைப்படம் வைத்திருந்தாய்..

கண்ணாடியில் கவனித்து சொல்..யார் சிறப்பு என்றாய்????

கண்ணாடி சிரித்தது ...பைத்தியம் என்று!

வராதே என சொல்லி..அழைப்பிதல்!!

கை மாற்றிய ...

கடிதங்கள்..கேட்டாய்---

கள்ளி..இப்பொழுதும் தேன் கலந்திருந்தாய்..!!!

கள்ளுண்ட மயக்கமாய்..

அனைத்தும் உன் விருப்பமாய்--

மறு நாள்..

தேவதை போல வந்தாய்!!!

கை மாறின..காதல் சாட்சிகள்..

நினைவுகள் அழிந்தன என்றாய்..

அடி பாவி...

உயிரற்ற பொருள் கை மாற்றி..

உயிர் பறித்து போனாய்..

"மறந்து விடு" முதல் முறை வசியமற்ற உண்மை குரலில்........

வருத்த படுகிறேன்..

"இன்றும்" நிறைவேற்ற முடியாததால்!!!!