Friday, 27 December 2013

மனதில்..ஏறிய மரவட்டை..!!

கரம் கூப்பி...
குனிந்து வரவேற்கும் போதும்..
இதழோர சிரிப்பில் தெரியுது இகழ்ச்சி

கரம் பற்றி..
வாங்க வாங்க சொல்லும் போதும்
கை அழுத்தத்தில் தெரியுது.. வன்மம்

கடைசியாய்..பார்க்கும்
காரிய நேர கண்ணீரின் போதும்
எட்டி பார்க்கும் நிம்மதி..

அடக்கமாய் பேசி
அமட்டாமல் போகும் போதும்
அப்பட்டமாய் தெரியும் அழைப்பு

பண்பாய் பேசி
பதுவிசாய் போகும் போதும்
உண்டாக்கி போகும் விரசம்

அன்பாய் பேசி
ஆதரவை சொல்லும் போதும்
வெளி தெரியும் புகைச்சல்

காலில் விழுந்தவனை
ஆசிர்வதிக்கும் போதும்
முழுதும் மலர்ந்திடாத மனம்

தெய்வ சன்னதியில்..
தாழ் பணிந்த்திட்ட போதும்
மனம் விட்டு போகா செருக்கு

மன்றம் கூட்டி
வீரமாய் மொழிந்த போதும்
முற்றமமிடித்த துரோகம்

ஆசையாய்..அள்ளி அள்ளி
கொஞ்சல் மொழி சொல்லும் போதும்
முழுதும் நிறையா முகம்

அன்புடனே..
அன்னம் பரிமாறும் போதும்
முழுதும் பரிமாறப்படாத அன்பு

சுற்றி சுற்றி வருகிறேன்
முழுதும் மனிதம் நிரம்பிய மனிதன் தேடி

மழை பெய்த மண்னில்
இலையுது.. மரவட்டைகள்
திரிகின்ற மனிதர்களின் மனதிலும்

இதனை தேடி தேடி
கனியிருக்க காய் கவர்ந்த என்னிலும்
மனதில் ஏறிய மரவட்டை!!

Saturday, 2 March 2013

போடி..போ..

உன் கேசம்.. 
கலைத்த காற்றுக்கு தெரியுமா..
அந்த கலையலில் சிதைகிறது என் மனமென
கரும் மேக கூட்டத்திலிருந்து..
வெளி வரும் ..பளீர் நிலவாய்..
கலைந்த கூந்தல் ஒதுக்கி பிரகசிக்கும் உன் முகம்..
உனை பிரிந்திருக்கும் நேரம்..
அந்த நிலவு சுடுகிறது..
பார்த்திருக்கும் நேரமோ இந்நிலவு சுட
அமாவாசை நாளில் மட்டும்தான் கொஞ்சம் நிம்மதி..
மின்னி மின்னி மறையும் நட்சத்திரங்கள்..
தரையிலிட்ட மீனாய் துடிக்கும் உன் விழிகளாய்
எனை சுட்டு அதனையும் களவாடி போகுது..
போடி...
மரணத்தை விட கொடுமையானது உன் நினைவுகள்
தற்காலிக மரணம் தரும்..
நித்திரையை கொன்று....மிககொடும் அரக்கனாய்
உரு பெற்றுவிட்டது உன் நினைவுகள்!!
போடி..போ..
நீ வேண்டாம்..உன் நினைவு வேண்டாம்..
போடி..போ..

Friday, 1 March 2013

முழு நிலா..

முழுநிலா ஒளியில்..
நீண்ட மணற்கரையில்..
சலசலத்த நீரின் ஒலியில்..
கேசம் கலைத்த காற்றில்..
உள்ளுறுப்பையும் நடுக்கிய வாடையில்..
மிதக்காமல் மிதந்த மேகப்பொழுதில்..
மின்னாமலே மின்னிய நட்சத்திர மாலையில்..
கொல்லாமல் கொன்றுவிட்டாய் ஒற்றை சொல்லில்
சுட்டெழுப்பிய சூரியன் சொல்லியது..உண்மை யென
கை கழுவிய கண்ணகி சிலையை..
கடக்க அஞ்சுகிறேன் இனும்..
எனை மீறி வழியும் கண்ணீரை..
எவரும் அறிவாரோ என எண்ணி..!!

தனிமை

யாருமற்ற தனிமையில்...
உன் நினைவுகளையும்..
உந்தன் வார்த்தைகளையும் அசை போடும் போது
இந்த தூக்கமின்மை நோயும் சுகமாய்!!

சாதீ ஒழிப்பு உறுதி மொழி

அன்பு முக நூல் நண்பர்களுக்கு..
நட்பில் சாதீ பார்ப்பதில்லை..
சாதியை பார்ப்பவர்க்கு நட்பு தேவையில்லை..
சாதி பெயரை இணைத்துள்ள நண்பர்கள்..
எனை அவர்களின் நட்பு வட்டத்திலிருந்து நீக்கி விடும்படி கோருகிறேன்...
சாதீய உணர்வு அதிகமுள்ளவர்களும் எனை விலக்கிவைக்குமாறு வேண்டப்படுகிறார்கள்!
இதனால்..நீங்கள் ஒன்றும் குறையப்போவதுமில்லை..
இந்த சமூகத்தில் பெரிய மாற்றம் நிகழ்ப்போவதுமில்லை என்பதை அறிந்தேயிருக்கிறேன்.
ஆனாலும்.. என் முயற்சியை முன்னெடுக்கிறேன்.
யாருடைய மனமாவது புண்படின் எனது வருத்தங்களையும் பதிவு செய்கிறேன்.

Monday, 25 February 2013

காதலி-ஆசிட்??

ஏனோ..
வெற்றிடத்தை ..அதிகமாக்கியே செல்கிறது
உந்தன் உதட்டளவு வார்த்தைகள்..
என் உளத்தை நிறைக்க..உன் புன்னகை போதும்..
அது இதயத்தில்..தொடங்கியிருப்பின்!!!

விலகி போ..
என்று மரண தண்டனை தராமல்..
உதட்டளவு வார்த்தைகளில்..
கருணைமனு கால சித்ரவதை தருகிறாய்..

உண்மை சொல்லி விலகி போக..
தயக்கமேனோ???
மீதமிருக்கும்..காதலா?? கருணையா?
அமில வீச்சாகுமென பயமா???

கவலை படாதே..
உண்மை காதலில்.. வலி இருக்கும்
பழிக்கு பழி இருக்காது..
எங்கிருந்தாலும் வாழ்க சொல்லும்..
வாயற்ற ஊமையாய்தானடி என் காதலும்..

சொல்லிவிட்டு விலகி விடு..
நேற்றைய நினைவுகளில்..
உன் பெயரை என் குழந்தைக்கு வைப்பேன்!!!

Friday, 22 February 2013

நீரின் பணி..

என்ன செய்வது என்று புரியாத போது..
செய்வதை.. அரை குறையாக விட முடியாமல்..
முழுக்க செய்கிறேன்..
விளைவுகள்.. தெரியா!?
வேரில் விழும் நீருக்கு..
அது நெல்லா..இல்லை புல்லா?? தெரிவதேயில்லை..
நெல்லின் வேரில் விழும் நீரும்.. அறிவதில்லை
விளையப்போவது.. மணியா இல்லை பதறா என?
மொத்தத்தில்..இன்று நீராயிருக்கிறேன்..
விளைச்சலில் பங்கில்லை..
விளைவுகளில்..???

விட்டில் பூச்சி வலிகள்..

விளைச்சலில்..விளைவெதெல்லாம்
விற்பனைக்கு வருவதில்லை..
விளைவுகளின் வலியும்..
வெளிகொணரப்படுவதில்லை..
வெளிச்சம் தேடும் விட்டில்களாய்..
விளைவுகள் தெரியா செயல்களும்..
வெளிச்சம் தேடி மடியும் விட்டிலை விட
வெளிச்சம் கொடுத்து விட்டு மடியும்..
மின்மினிகள்..சிறந்தவையோ??
எனில் விட்டில்களின்.. வேலைதானென்னவோ??
பயனற்ற வெற்று .. படைப்புகளும் உண்டா படைப்பியலில்...??

வெறும் வெற்றிடம் நிரப்பி...
வெற்று இடம்.. ஏற்படுத்தா போகும்..
சில பல மனிதர்களின் எச்சமா விட்டிலும்??

காதல்..

உள்ளுக்குள்..நீ ஒளிந்திருக்கிறாய்.. என்பது
இனிய காதல் கீதமும்..
கரம் கோர்த்து திரியும்.. காதலர்களும்
ஒரு துளி .. கண்ணீரும்
சிறு ஆற்றாமை தீயையும்..
தருகின்ற நேரமெல்லாம்.. தெரிகிறது!!

கருணை..

பிச்சைகாரர்களின் பாத்திரமும்..
பாலைவன மணலும்.. 
காத்துகிடக்கின்றன கருணையை எதிர்பார்த்து!!
கடக்கின்ற கால்களும்..
மிதக்கின்ற மேகமும்..
ஏமாற்றத்தையே..தருகின்ற போதும்..
நம்பிக்கையுடனே நகரும் நாட்கள்...!!!!

வினோதினி-காதல் தலைகுனிவு- 12.2.13

பார்த்தவுடன்..வரும் காதல்..
பார்க்காமலே வரும்..காதல்..
களவு புரிபவன் மேல் வரும்.. காதல்..
கற்பழித்தவன் மீதே வரும்.. காதல்..
இப்படி காதலை.. கறிகாய் போல் ஆக்கிய 
அத்துனை திரைதுறை அன்பர்களுக்கும்..
வினோதினியின் அன்பு காணிக்கை!!!

ரவுடிகளை.. வீரப்பன்களை...
குடிகாரன்களை.. திருடன்களை..
பெண்கள் பின்னால் அலைபவனை..
கதானாயகனாக்கிய.. அரிவுஜீவிகளே..
அப்பாத்திரங்களை ஏற்று நடித்த நல்லவர்ளே..
நாளைய தலைவர்களே...

சகோதரி வினோதினியின் இனிய வணக்கங்கள்..

உலக காதலர் தினத்திற்கு .. இனிய பரிசு !!

காதலை.. சுவாசித்து காதலை கவிதையாக்கி..
ஒரு தலை காதலை..கூட உயர்த்தி பிடிக்கும்
என் உணர்வுகளை வெறுக்கிறேன்..
பாதகன் இவன் கொண்டதும் காதல் என்றால்..
ஓ காதலே உனை.. வெறுக்கிறேன்!!

இனும் பல வினோதினிகள்.. வெளிச்சம் படாமலே..
காதல் என்பதும்.. காமம் என்பதும்..
நம்மை விரும்புவர்கள் மேல் வர வேண்டும்!!

உலகின் உச்சபட்ச அன்பின் நிலை காதல்..
புத்தனை தாண்டிய சகிப்புதன்மையே காதல்..
மரணிக்கும் வரை மறவாதது காதல்..
மன்னிக்க தூண்டுவது.. காதல்..

எனதருமை சகோதரியே.. இந்த காதலை மன்னித்துவிடு!!
இனும் இவ்வுலகம் மீதம் வைத்திருக்கும்.. அன்பின் ஊற்றுகண் அது..
மன்னித்து விடு.. மன்னித்து விடு..
உன் ஆன்மாவின் துனையை..
அனாதவரற்ற பெண்களுக்கு துனையாக்கிவிடு..
வேண்டம் இனுமொரு வினோதினி!!

காதலர்தின..காசு தினம்

காதலும்..காசும் ஒன்றடா..
எவ்வளவு கிடைத்தாலும்..போதவில்லை!
அடுத்தவனிடம் இழப்பதற்கு விரும்புவதில்லை..
தான் கொண்டதை விட..
அடுத்தவனின் கையிருப்பை.. கவனிக்க செய்வது..!!
கள்ளதனத்தில் வந்தாலும் வசீகரிப்பது..
இழந்தபின்னே .. ஞானம் தருவது..
இன்று வெறுத்து.. நாளை மோகம் தருவது!!
காவி கொண்டபின்னும்.. காலை சுற்றுவது..
முன்னதின்றி பின்னது வாழும்..
பின்னதின்றி முன்னது.. வற்றிபோகும்!

காசு வேண்டும்.. நண்பா.. காசு வேண்டும்..
காதல் வாழவும் காசு வேண்டும்!!!

காதலர் தினத்தில்..கொஞ்சம் அதிகம் உழைப்போம்!!

குமுதம்-கேவலம்

மிக மிக தவறான ... முன்னுதாரணத்தை 
ஏற்படுத்திவிட்டது..குமுதம்!!
பெரியாரை..மணியம்மையின் பெயர்களை...
90 வயது உடைய முன்னாள் முதல்வரை..
2 மகள்களின் நல்ல அம்மாவை..
மிக கேவலப்படுத்தி உள்ளது!!..

இது ஒரு "பத்திரிக்கை" விபச்சாரமன்றி வேறில்லை..
கண்ணியமற்ற குமுதத்தின் செயலை கண்டிக்கிறேன்!!

கட்சி வேறுபாடின்றி தவறை கண்டிக்கிறேன்..
பத்திரிக்கைகளின்.. மாண்பை காப்பாற்றும் செயல்கள் தமிழ் நிறுவனங்களிடம் இல்லை.

எல்லா வகையிலும்..
தமிழன் தலை குனிய வேண்டிய நிலையே இங்கு!!!

கட்சிகள்..அதன் தலைவர்கள்..
சினிமா..அதன் அரசியல்
ஒரு சார்பு பத்திரிகைகள்..
இதனால்..
ஈழம்..
கூடங்குளம்..
பெரியாறு அணை..
காவிரி நீர்..
மீனவனின் உயிர்கள்..
இனும் பல இழப்புகள் தமிழகத்திற்கு!!

தமிழ்..இனி மெல்ல சாகும்!!

காவிரி..அரசிதழில் பதிவு

என் நிலங்கள்..தரிசாய் போகா
அந்திம காலம்.. காணி நிலத்தோடு
நான் நெல்லறுத்து..அரிசியளப்பேன்..
கிராமம் விட்ட சொந்தமனைத்திற்கும்!!
அரசியல் கலக்கா நன்றி...

தஞ்சை மண்ணை காப்பாற்றிய அனைவருக்கும்!!

Wednesday, 23 January 2013

வலி...மன வலி

நீ தந்த வலியில்..
கரம் தலை தாங்க கவிழ்ந்திருந்தேன்..
கண்கள் ஏனோ கட்டுபாடை தொலைத்து
கண்ணீர் முத்தாய் என் பலகையெங்கும்..
நீர் திவளைகளை..ஒன்றினைத்து
உன் பெயர் எழுதி முடித்தது...
என் விரல்கள்-அனிச்சையாய்???!!!

மௌனமழை...

சிறு தூறல் மழையா..
பெரு வெள்ள அடை மழையோ..
தெரிவதே இல்லை...
கரு மேகம்.. பொழியும் வரை!

கட்டுக்கடங்கா அன்பா..
காட்ட முடியாத வெறுப்போ..
விளங்க முடியா..
உன் மௌனம்!!!

என் வார்த்தைகள்..
வட்டிக்கு வாங்கும் ஏழையாய்..

உன் மௌனம்.. 
குபேரன் பேழையாய்.. கணக்கிலடங்கா

புயல் காற்று வெள்ளத்தில்..
ஆல மரம்.. பிழைத்திருக்கும்..
நாணலும் ..பிழைத்திருக்கும்..

நானோ
தனியே நிற்கும் தென்னைமரம்..
எனக்கு முட்டு கொடுப்பதெல்லாம்.. வாழை கன்றுகள்

சீக்கிரம் பெய்துவிட்டு போ..
சிந்திப்பதை விட.. அதனை சந்திப்பதே மேல்!!!

Friday, 18 January 2013

காலம்

காலங்கள் புரட்டி போடும் கடல்கள்...
மலைகள் மண் மேடாய் மாறி போகும்...
காடுகள் .. கடுகளவாய்
வனாந்திரங்கள்..பாலை வனமாய்
மனித குலம் நசித்து போகும்
கடல் பொங்கும்..
ஆழி சூழும் இவ்வுலகில்..
கடைசியாய் விதைத்து போகும்..
நல் நம்பிக்கை ஒன்றை..
மீண்டு விடும் மீண்டும் இவ்வுலகு!!??

காலம்..வரும்

காலம் காத்து கொண்டேயிருக்கிறது...
காயப்படுத்துவதற்கு...
கரை தொட அலைகள் வந்தே தீரும்..
அதில் தொலந்தவை வருமா அறிகிலேன்?
காயங்களுக்கு மருந்துகள் கிட்டலாம்..
ஆனால் தழும்புகள் மறையுமா?
குயிலின் இசை அழகாய்...
அதிலுள்ள சோகம் புரியாமலே??
துவண்டு விட்ட தோள்களே..
இருண்டு விட்ட கண்களே..
அயர்ந்து விட்ட மனமே..
ஏறி இறங்கினால்தான் நீர் வரும் ஏற்றத்தில்..
இருளுக்கு பின்னும் வருகிறது வெளிச்சம் முற்றத்தில்
தொலைத்துவிட்ட நொடிகள் கிடைப்பதில்லை
காயப்பட்ட மனம் மறப்பதில்லை..
இவை மறுப்பதற்கில்லை..
ஆனாலும் இவனிதயம் இறப்பதற்கில்லை..
ஒரு நாள் மழைக்கு காத்திருக்கும்...பாலை மரமாய்
ஒரு நாள் வரும் விடியலுக்காய்...காத்திருப்போம்!!

Tuesday, 1 January 2013

மழை நினைவு..

வருடத்தின் ஒரு மழை நாள்
ஒரே மழை நாள்
அனுபவிக்க ஆசையாய்
விட்டு விட்டு சொட்டு சொட்டாய்
இமை மூடி ரசித்த வேளையில்
வெறுப்புற்று .. அறை ஒதுங்கினேன்
எனை நனைத்திட்ட ஒவ்வொரு துளியும்
உன் கரம்பிடித்து நனைந்திட்ட நினைவில் நனைக்கிறது!

மாற்றம்..

நான் உன்னிடம்..
நடை மாற்று..
உடை மாற்று..
இன்னும் அதிகம் வசீகரிப்பாய் என்றேன்

எனை பற்றி என்றேன்..
நீண்டது சிந்தனையும் மௌனமும்..
ஊக்கினேன் எனை மாற்றி கொள்ள தயாராய்

எதையும் பிரித்தறிய முடியவில்லை..
எல்லாமும் அழகு என்றாய்

இல்லையடி.. உன்னில் மாற்றம் தேடும்
மனப்பிழை அழகில்லையடி என்றேன்

எனை அழகாக்கவே..
அதிகம் காதலிக்கவே சிந்திக்கும்...
மனமும் மிகு அழகு என்றாய்..

யாரில் மாற்றம் வேண்டும்???

கனவுகளை தொலைத்த கண்கள்..


நான் பேசுகிறேன்..
  கனவுகளை விதைத்து...
காலத்தை தொலைத்தவன் பேசுகிறேன்..

நீர் பாய்ச்சி..
நெல் விதைத்தோம்
குருதி பாய்ச்சி
கனவுகள் விதைத்தோம்

மானம் காக்க..
இளமை தொலைத்தோம்
மொழி காக்க ..
பழி ஏற்றோம்..

கொலைகள் உண்டு..
களவுகள் இல்லை..
கள்ள தோனிகள் உண்டு..
காமவெறி இல்லை..

முப்படை உண்டு..
மூன்றாம் படையுமுண்டு
அதில் ஐந்தாம் படையுமுண்டு..

காவல் நிலையம் அமைத்தோம்..
  கல்வி நிலையம் அமைத்தோம்..
காந்தியின் கனவு.. நடு இரவில் பெண்கள்
நிறைவேற்றியது நாங்கள்..

கூடு தேசம் கட்டி ..
வாழ்ந்து வந்தோம்
வல்லூருகள்..ஒன்றினைந்து
தூக்கனாங்கூட்டை துண்டாடியது

முள்ளில் மலர்ந்த தேசம்
முள்ளி வாய்காலில் முடிந்தது

வீழும் அலைகள் எழுமென்பார்..
வீரம் விதைகப்பட்டதென்பார்..
தலைவன் வருவானெம்பார்..
தலையெழுத்து மாறுமென்பார்

அவரை விதைத்து..
சுரை முளைக்குமென்பார்..
கனவை விதைத்து..
நிஜம் நடக்கும் என்பார்..

குருத்துகள்..
  களையெடுக்கப்பட
கலாச்சாரம் கெடுத்து
களையாக மாற்றப்பட

சிங்கள விதையில்
  தமிழ் வளர்வெதப்படி..
உதிரத்தில் குழப்பமானபின்
உணர்வுகள் மாறுமெப்படி..

தொப்புள் கொடி உறவுகள்..
வெட்டி விட்ட பின்
அகதியாய் சென்று..
செல்வ சீமானாய் மாறியபின்
ஈழமென்றும்.. கனவென்றும் கதைப்பார்கள்
இங்கடை வந்து கடினப்பட தயாராய் யாருண்டு??


எங்களின் குருதிக்கு.
மெழுகவர்த்தீயில் .. அஞ்சலி
இனுமும் நாங்கள் காவலர்களே
எங்களால் சிலர் பிழைக்கும் வரை

எங்களின் கனவுகள்..
காயப்படலாம்.. களங்கபடலாமா??

உலகம் விழிக்கும் போது..
நிரந்தர நித்திரையில்.. யாம் அனைவரும்!!
கோடி நன்றிகள் எதிரிக்கு..
இதை காணாவெட்டாமல்..எமன்பதம் சேர்த்ததற்கு!!

மழை..சாரல்

பெய்து விட்டு..போயேவிட்டது மேகம்
சாரல் நிற்கவில்லை மனமதில்
கிழவிக்கு ஒப்பனை போல்
கழுவிவிடப்பட்டு பழைய கட்டிடங்கள்
குடை மறந்த அவளை
நனைத்துவிட்டு போனாய்
நனைந்துவிட்ட பாகங்களை பார்த்துவிட்டு
நடுக்கமேவந்து விட்டது எனக்கு
நல்ல வேளை சீக்கிரம் விலகி போனாய்
நடுக்கலோடு நின்றது போனது!!!

இதய சிதறல்

சிறுக சிறுக அடித்தால் சிதறிவிடும் 
எந்த பாறையும்.. தெரிந்துதான்
இதயத்துடிப்பில் ஒளித்தாய் உன் நினைவை
அடித்து அடித்து 
உடைகிறது என் இதயம்.. உன் நினைவுகளால்!!