Friday, 6 August 2010

இனி என்ன செய்வாய் தமிழா!!???

என்ன செய்தாய்?
கொத்து கொத்தாய் கொன்ற போது..
என்ன செய்தாய்..?
திரைபடத்திற்கிடையே..காட்டிய செய்தி தவிர்த்தாய்..
சில தன்மானத் தமிழன் உயிர் நீத்த பின்..
ஒரு சில துளி கண்ணீர் வடித்தாய்..
ஒரு மணி நேர தூக்கம் தவிர்தாய்..
ஒரு கவளம் உணவு மறுத்தாய்..!
மறு தினம்..
இருமுறை புணர்ந்தாய்..
அனைத்தும் ஈடுகட்டினாய்..!

தேர்தல் திருவிழாவில் தன் மானம் தொலைத்தாய்..
பொய் சண்டையிடும் நாயகனை தலைவனாய் ஏற்றாய்..
தமிழினம் காக்க வந்தவனை மறந்தாய்..மறுத்தாய்..தவிர்த்தாய்!!?
கனவினை நகரமாய் நெய்தவன் அவன்..
வீரத்தமிழினம்..வெற்று வார்த்தையில்லை என மெய்பித்தவன்!

மெய்யா.....இல்லை பொய்யா...????

ஒரு சில நிமிடம் வருந்தினாய்!
இனி என்ன செய்வாய் தமிழா????
யுத்தம் முடிந்தது என இரு சினிமா பார்ப்பாயோ?
முள்வேலியில் மூன்று லட்சம்..தலைவிதி என விடுவாயோ?
முள்வேலியில் மானமிழப்பது..தவறல்ல என்பாயோ?
இளமையற்ற ஈழத்தை அமைக்கும் சிங்கள திறமையை வியப்பாயோ?

என்ன செய்வாய்...??
வந்தாரை வாழவைத்த தமிழினம்..
கையேந்தி நிற்பதை..தடுப்பாயா..அல்ல
தலைவன் வழியில் "கேட்டுப் பெற வேணும்" என்பாயோ?
இல்லை..இலவசத்திற்கு கையேந்துவதால்..கவலையற்று இருப்பாயோ?

இனி என்ன செய்வாய் தமிழா???
ஏதாவது செய்!!
மரண நிழல் படிந்த முகாமிற்குள்.. சிறு ஒளியேற்ற ஏதாவது செய்!
யாருடனாவது பேசு..மின்னஞ்சல் அனுப்பு..
ஒரு சில நிமிடம் தினம் செலவு செய்!
நெய்யூற்று..தமிழின தீபம் அணையாதிருக்க..
ஓரிரு சொல்லில் சுள்ளி கொடு...
தீபம்..தீயாய் மாறட்டும்..!!!!
அணையாது காப்போம்..தலைவன் மீண்டு வருவான்..!!
அவன் தோளில்..பாரம் இறக்கி வைத்து ..மீண்டும் உறங்குவோம்...

என்ன செய்வாய் தமிழா??
உறங்கி கழிவதும்..கூடி கலைவதும் உன் தொழிலாய்..!
நமீதா இடையழகா..இல்லை துடையழகா..?பெருங்குழப்பம் உனைகிறுக்க
என்ன செய்வாய்...ஈழத்தமிழுக்கு??
ஒரு தின ஊதியம் கொடுப்பாய்!
ஒரு நாள் போராட்டத்தில் ஓய்வெடுப்பாய்!
ஒரு நிமிடம் கவலையில் திரிவாய்!

என்ன செய்வாய் தமிழா???
ஏதாவது செய்ய வேண்டும்...
தமிழா உனை வசை பாடி.. எனை வசை பாடி..போதாது..
என்ன செய்வாய் தமிழா???

இவன்,

செய்வதறியாது மன்னிப்பு கோரும் ஒரு தமிழன்.

No comments:

Post a Comment